பற்கள் சரியில்லை எனக்கூறி மனைவிக்கு முத்தலாக் அளித்த கணவர்!

மனைவியின் பற்கள் சரியில்லை எனக்கூறி முத்தலாக் அளித்துள்ளார் கணவர். ருக்சானா பேகம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி அன்று முஸ்தஃபா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் திருமண வாழ்க்கை தொடக்கத்திலிருந்தே கசப்புடன் நகர்ந்துள்ளது.

 

இந்நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதங்களில் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார் முஸ்தபா. அதற்கு அவர் கூறிய காரணம் தனது மனைவியின் பற்கள் முறையாக இல்லை என்பதுதான். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ருக்சானா பேகம் தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் திருமணத்தின் போது மிகப்பெரிய அளவில் வரதட்சணை கேட்டதாகவும், அதனை பூர்த்தி செய்த பின்னரும் தொடர்ந்து அவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

 

தனது சகோதரரை வற்புறுத்திய முஸ்தபா இருசக்கர வாகனம் பெற்றதாகவும் ருக்சானா தெரிவித்துள்ளார். ருக்சானா பேகத்தின் பற்கள் தொடர்பாக முஸ்தபா அசிங்கமாக பேசியதாகவும் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் 15 நாட்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து ருக்சானா பேகத்தை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று விட்டு அங்கேயே மூன்று முறை தலாக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் ருக்சானா புகார் அளித்ததும் அவரை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் முஸ்தபா. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் செல்போனில் தொடர்புகொண்ட போது கொடுத்த முத்தலாக்கை திரும்பப் பெறப் போவதில்லை என்றும், வேறு திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார் முஸ்தபா.

 

இதனையடுத்து ருக்சானா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து முஸ்தபா மீது வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முத்தலாக் தடைச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply