மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியை கொலை செய்ததாக கொள்ளுப்பேரன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் வேலூரில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கத்தி, கொஞ்சம் மயக்கமருந்து அவ்வளவுதான், அவற்றை வைத்து ஒரு மூதாட்டிக்கு முடிவுரை எழுதி இருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். அதில் அதிர்ச்சி என்னவென்றால் இக்கொலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அந்த மூதாட்டியின் கொள்ளுப்பேரன் என்பதுதான்.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தை சேர்ந்த ராஜம்மாளுக்கு வயது எண்பது. கணவரை இழந்த இவர் அப்பகுதியில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் அதிகாலை வேளையில் இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டு பதற்றமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே இருந்து ஒருவர் வெளியே தப்பி ஓடினார்.
வாயில் இரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வீட்டிற்குள் அவரின் கொள்ளுப்பேரன் மோனிஷ் நண்பருடன் இருந்ததை கண்டு குழப்பம் அடைந்தனர். என்ன நடந்தது என்று விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளுப்பேரனாலேயே மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் அம்பலமானது. பெங்களூருவில் வசித்து வந்த மோனிஷிக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது. கொள்ளுப்பாட்டி ராஜம்மாள் வீட்டில் பணம் சேர்த்து வைத்திருப்பதை அறிந்த மோனிஷ் நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார்.
ராஜம்மாளின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து பணத்தை கொள்ளை அடிப்பதுதான் அவர்களின் திட்டம். அதனை செய்ய முற்படும்போது ராஜம்மாள் கூச்சலிட்டதால் பதற்றமடைந்த மோனிஷ் தனது கொள்ளுப்பாட்டி என்றும் பாராமல் அடித்துக் கொலை செய்துவிட்டார் என கூறுகிறது காவல்துறை. அதற்கு சாட்சியாக அவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் மயக்க ஸ்பேருவும், மூதாட்டி அணிந்திருந்த கம்மல் மற்றும் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூருவைச் சேர்ந்த மோனிஷ் அவரின் நண்பர் பிரிஸ்வால் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய வினய் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.