அரசு மருத்துவர்களை அலட்சியப்படுத்தாமல் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார்.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்களை அச்சுறுத்தாமல் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணியிடை நீக்கம் செய்வோம் என்று கூறுவது அரசின் அதிகாரப்போக்கையே காட்டுவதாக குறிப்பிட்டார்.
சென்னை தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் மருத்துவர்களின் போராட்டம் நியாயமானது என்றும் அவர்களின் போராட்டத்தை பாமக ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.