தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 11 லட்சத்து 45 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 1,050 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும் ஏழைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது .
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 8 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து 30 கோடியே 65 லட்சம் ரூபாயை திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர் பேசிய அவர் கடந்த எட்டு ஆண்டுகளில் 11 லட்சத்து 45 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 1,050 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தாலிக்கு தங்கம் 5 ஆயிரத்து 220 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய அமைச்சர் சரோஜா முதியோர்களுக்கு சிறப்பாக சேவை செய்த மாநிலம் என்பதற்காக தமிழகத்திற்கு ஜனாதிபதி விருதை விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் சென்னை இடையே இரண்டு புதிய குளிர்சாதன சொகுசு பேருந்துகளையும் வாழப்பாடி முதல் பெரிய குட்டி மடுவு கிராமத்திற்கு புதிய வழித்தட நகரப்பேருந்து களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் மொத்தம் 10130 பயனாளிகளுக்கு 4 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.