ஐ.நா. பொதுச்சபையில் இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய பிரதிநிதி பதிலடி

ஐநா பொதுச் சபையில் முதன் முறையாக நேற்று உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் அணு ஆயுத போர் வெடித்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என மிரட்டினார். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் என்னவேண்டுமானாலும் நேரிடும் என்றும் இம்ரான்கான் கூறினார்.

 

இந்தியாவை விட 7 மடங்கு சிறிய நாடான பாகிஸ்தான் சரண் அடைவது இல்லை சுதந்திரத்திற்காக கடைசிவரை போரிடுவது என்ற நிலை வந்தால் அணு ஆயுதத்தை வைத்திருக்கும் நிலையில் கடைசிவரை போரிடுவதை தேர்வு செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய நிலை எல்லைதாண்டி விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிப்பது போன்று தெரிவித்துள்ளார். இது அச்சுறுத்தல் அல்ல நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் கவலை என்று கூறியுள்ளார்.

 

இந்நிலையில் இம்ரான் கானின் பேச்சுக்கு ஐநா பொதுச் சபையில் இந்தியா பதிலளித்துள்ளது. மோதலை தூண்டுபவர்கள் அமைதியை வரவேற்க மாட்டார்கள் என்பதை காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் தீய எதிர்வினை காட்டுவதாக ஐநா விற்காக இந்திய பிரதிநிதி குறிப்பிட்டார். இந்த மாமன்றத்தில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றில் பதிவு பெறும் என்பதை மறந்து விடக்கூடாது என கூறிய அவர், இம்ரான் கானின் பேச்சு ஐநாவில் பிளவை தூண்டும் முயற்சி என குறிப்பிட்டார்.

 

வேறுபாடுகளை கூர்மையாக்கி வெறுப்பைத் தூண்டும் இம்ரான் கானின் பேச்சு சுருக்கமாக பெருமைக்கும் பேச்சு என வரையறுத்து விடலாம் என இந்திய பிரதிநிதி கூறினார். எங்களுக்கு எதிராக அவர்கள் பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் முஸ்லிம்களுக்கு எதிராக மற்றவர்கள் என உலகில் எல்லாவற்றையும் இரண்டு எதிரெதிர் நிலைகளில் நிறுத்தும் கொடூரமான சித்தரிப்பை பாகிஸ்தான் பிரதமர் பேச்சு காட்டுவதாகவும் விமர்சித்தார்.


Leave a Reply