கல்லூரிக்கு சென்ற மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே கிணற்றில் இருந்து கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற இவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.

 

இதனால் அவரது பெற்றோர் கல்லூரியில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

 

உடனடியாக விரைந்து சென்ற மாணவியின் பெற்றோர் உயிரிழந்த பெண் தங்களது மகள் தான் என உறுதி செய்தனர். சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுவதால் மாணவியின் மரணம் கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply