கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் எனவும், குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் என தெரிவித்தார். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும்,ஆன்லைன் மூலமாக விண்ணப்பதால் பிரச்சினை இல்லாமல் எளிதாக கிடைக்கும் எனவும் அவர் கூறினார். மேலும் குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

சூயஸ் குடிநீர் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது எனவும், எதிர்கட்சி கொண்டு வந்தாலும் நல்ல திட்டம் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.சூயஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு புரளிகளை பரப்பி வருகின்றனர் எனக்கூறிய அவர், சூயஸ் நிறுவனத்திற்கு கட்டண உயர்த்தும் அதிகாரம் கிடையாது எனவும்,குடிநீர் விநியோக உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராசாமணி,சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






