தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய பாஜக அரசும் அதிமுக அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை எல்லாம் வடமாநிலத்தவர்கள் வாரி வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதன்மூலம் வேலையின்றி தவிக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக காலி பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு 90% முன்னுரிமை அளிக்கும் வகையில் போட்டித் தேர்வின் விதிமுறைகளில் மத்திய அரசு உடனே திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வு விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.