தேஜஸ் விமானத்தில் பறந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணித்தார். இதன்மூலம் தேஜஸ் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். அரசு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது.

 

மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தை தரையிறக்கும் சோதனை முயற்சி சமீபத்தில் கோவாவில் நடந்தது. இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விமானத்தில் பறந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். இந்த சோதனை பயணத்தின்போது ஏர் வாய்ஸ் மார்ஷல் திவாரி உடன் பயணித்தார். சுமார் 30 நிமிட பயணத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் இந்த பயணம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் வித்தியாசமான அனுபவம் அமைந்ததாகவும் கூறினார்.

இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மிகச் சிறப்பான முறையில் தேஜஸ் போர் விமானத்தை வடிவமைத்துள்ள நமது விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு ராஜ்நாத்சிங் வாழ்த்துக்கள் தெரிவித்தார். போர் விமானங்களையும் தளவாடங்களையும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நமது நாடு முன்னேறி இருப்பதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.


Leave a Reply