காவிரி ஆற்றில் இருந்து ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியிலிருந்து இருந்து 65 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் நேற்று 70 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையும் நிரம்பியதால் ஒகேனக்கலில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு நீர் தேங்கி நிற்கிறது.
ஒகேனக்கல்லில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுவதால் 33 ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவிரியில் வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.