அதிமுக தமிழக அமைச்சர்கள் வெளிநாட்டு சுற்றுபயணம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளது விவாதப் பொருள் ஆகியுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் மேலும் எட்டு அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கின்றனர். முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரிட்டன்., அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார்.
முதற்கட்டமாக லண்டன் சென்றுள்ள அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுள்ளார். இவரை தவிர வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சிங்கப்பூர் சென்றுள்ளார். இதையடுத்து தாய்லாந்து இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அங்குள்ள வனவிலங்கு பூங்காக்கள் பார்வையிடும் அமைச்சர் அங்கு இருப்பது போல் வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் இரவில் பார்வையாளர்களை அனுமதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிகிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச தொழில்துறை கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது பின்லாந்தில் அங்குள்ள கல்வி முறையை அறிந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் மொரிஷியஸ் என்றார். அந்நாட்டு அதிபர் பரமசிவம் பிள்ளை விடுத்த அழைப்பின் பேரில் அவர் மொரிஷியஸ் சென்று திரும்பியுள்ளார்.
லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மேலும் மூன்று அமைச்சர்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்காக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிரிஷ்ணன் ஆகியோர் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




