ஐஜி மீதான பாலியல் வழக்கு தெலங்கானாவுக்கு மாற்றியது உயர்நீதிமன்றம்

ஐஜி மீதான பாலியல் வழக்கை தெலுங்கானாவிற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையில் ஐஜி மீது பெண் எஸ்பி தொடர்ந்த பாலியல் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சி.வி. கார்த்திகேயன் நடத்திய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐஜி மீது பெண் எஸ்பி கொடுத்த புகாரையும், சிபிசிஐடி பதிவு செய்த வழக்கையும் தெலுங்கானா மாநில காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டனர். விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் அதுவரை அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

 

மேலும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக தலைமைச் செயலாளர் உடனடியாக தெலுங்கானா தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவற்றை பெற்றதும் மூத்த பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தெலுங்கானா மாநில காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

வழக்கு வேறு மாநிலத்திற்கு தமிழக காவல்துறை மாற்றுவது தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என அர்த்தமாகாது என தெரிவித்த நீதிபதிகள், விசாரணை முடிந்த பிறகு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெலுங்கானா காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.


Leave a Reply