இன்று காஷ்மீர் செல்கிறது அனைத்துக்கட்சி குழு!

காஷ்மீர் மாநிலத்திற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இன்று செல்ல திட்டமிட்டுள்ளது. காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வர வேண்டாம், என்று அம்மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது.

 

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில்,இந்த குழு செல்லும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இதில் இணைந்து கொள்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செல்லும் நிலையில் மற்ற கட்சியினரும் செல்ல இருக்கிறார்கள் .

காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களான பரூக் அப்துல்லா,மெகபூபா முக்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வந்தால் அமைதி நடவடிக்கை பாதிப்பு ஏற்படும், என்பதால் தவிர்க்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

பள்ளத்தாக்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அரசியல் தலைவர்கள் அங்கு வருவது உகந்ததல்ல என கூறப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பிரிவினை வாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாத்து இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த சூழலில் அரசியல் தலைவர்கள் காஷ்மீருக்கு வந்தால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின் எந்த எதிர்க்கட்சி தலைவர்களும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது


Leave a Reply