லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் , அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கோவைக்கு நேற்று நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தை ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும்,மற்றவர்கள் இலங்கை தமிழ் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். கோவையில் இவர்கள் வரும் விநாயகர் சதுர்த்தியன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை சிட்டி கமிஷனர் சுமித் சரண் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை , மற்றும் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள்,பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகள் கோவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் நகரின் முக்கிய இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும்,கோவை போலீசாரால் பயங்கரவாதிகள் என்று எந்த புகைப்படமும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும்,பொதுமக்கள் தேவையில்லாத பதற்றம் வேண்டாம், போலீசார் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் எனவும்,சந்தேகிக்கும் வகையில் யாராவது தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து இன்று தமிழக கமாண்டோ படையினர் கோவை வருகை தந்துள்ளனர். 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர்.மேலும்,நகர் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி மோப்ப நாய் பிரிவு,வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதே போல மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.