ஐடி நகரமான பெங்களூரின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியிருக்கிறது. காரணம் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், காதலையும் கண்டித்ததால் 15 வயதேயான சிறுமி ஒருவர் தந்தையை குத்திக் கொலை செய்துள்ளார், என்பது தான். கத்தியால் குத்தியும் ஆத்திரம் தீராத சிறுமி உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தது தான் கொடூரம்.
பேஸ்புக் மோகமும், காதலும் இத்தனை கோபத்திற்கும் காரணம். இதே போன்ற கொடூர நிகழ்வு தமிழகத்திலும் ஏற்கனவே அரங்கேறியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் பேஸ்புக் காதலை எதிர்த்த தாயை கல்லூரி மாணவி ஒருவர் கொலை செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய போது தடுத்ததால் தாயென்றும் பாராமல் கொலை செய்தார்.
அந்த இளம்பெண் கைதான போது தாயை கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்த இளம் பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்கள் யாருமில்லை. தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், தனிமையில் இருக்கும் பிள்ளைகளின் கவனம் செல்போன் இணையம் பக்கம் திரும்புகிறது.
இதற்கு அடிமையாகும் பிள்ளைகள் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு தடைபடும் போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெற்றோர்களை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.






