ஜம்மு காஷ்மீரில் 13 நாட்கள் பதற்றம் நீடித்த நிலையில் தற்போது 2ஜி செல்போன் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக கூறி அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
தவறான வதந்திகளை பரப்புவதால் அங்கு செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
அதன் மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாறின.இதற்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் அங்கு 144 தடையுத்தரவு பிறக்கப்பட்டு அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தது. சுதந்திர தினத்தையொட்டி 144 தடை முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தற்போது பதற்றம் லேசாக தணிந்துள்ளதால் ஜம்மு காஷ்மீரில் 2ஜி மொபைல் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஜம்மு, ரேசி, சம்பா, கதுவா, உத்தம்பூர் ஆகிய பகுதிகளில் இணையதள சேவை தொடங்கியுள்ளது.