கோவையில் அரிய வகை பணத்தாள்கள், போர்கருவிகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி !!!

கோவையில் நடைபெற்ற அரிய வகை பணத்தாள்கள், போர்கருவிகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் ஜெயேஷ்குமார். பி.டெக் பட்டதாரியான இவர், பணத்தாள்கள் மற்றும் பழங்கால பொருட்கள் சேகரிப்பதில் ஆர்வம் மிகுந்தவர்.அந்த வகையில் ஜெயேஷ்குமாரின் பல ஆண்டுகள் முயற்சியில் சேகரிக்கப்பட்ட பணத்தாள்கள், அஞ்சல் தலைகள், பழங்கால பொருட்கள் உள்ளிட்டவை ஆர்.எஸ்.புரம் கிளப்பில் ஒருநாள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய பணத்தாள்கள், சிறிய பணத்தாள்கள், தங்க பணத்தாள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரிய பணத்தாள்கள், இந்தியாவின் முதல் ஒரு ரூபாய் நோட்டு, 17 ம் நூற்றாண்டு பணத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. கியூபா புரட்சியாளர் சேகுவேரா, நெல்சன் மண்டேலா உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பணத்தாள்கள், புல்லட் வடிவ நாணயம், 3டி வடிவ நாணயம், 100 ரூபாய் நாணயம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதேபோல 1948 ம் ஆண்டு உலகில் முதல் முறையாக வெளியிடப்பட்ட காந்தியின் முதல் அஞ்சல் தலை, தங்கம், வெள்ளி அஞ்சல் தலைகள் உள்ளிட்டவையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 390 நாடுகளின் பணத்தாள்கள் மற்றும் பல நாடுகளின் அரிய பணத்தாள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 16 ஆண்டுகளாக சேர்த்திருப்பதாகவும் ஜெயேஷ்குமார் தெரிவித்தார்.

பணத்தாள்கள் மட்டுமின்றி பழங்கால பொருட்கள், வளரி, கத்தி, கேடயம் உள்ளிட்ட போர் கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எளிதில் பார்க்க முடியாத அரிய வகை பொருட்களை பார்க்க முடிந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Leave a Reply