நீலகிரியில் சேதமான பகுதிகளை சீரமைக்க 10 கோடி நிதி : மு.க.ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுாரில் சேதமான பகுதிகளை, நேற்று முன்தினம் பார்வையிட்ட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, நிவாரணம் வழங்கினார்.நேற்று, ஊட்டி அருகே, குருத்துக்குளி கிராமத்துக்கு சென்று, பாதிப்பில் பலியான, இரண்டு பெண் தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கினார்.

 

பின், கப்பத்தொரை, எம்.பாலாடா, கல்லக்கொரை ஹாடா பகுதிகளில், காய்கறி தோட்டத்தை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். எமரால்டு முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன், வெள்ளத்தில் பலியான சென்னன் குடும்பத்துக்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கினார்.

நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது:ஆளுங்கட்சி அமைச்சர்கள், ‘ஆய்வு’ என்ற பெயரில், பெயரளவுக்கு பார்வையிட்டு சென்றனர்.மக்கள் நலன் கருதி, தி.மு.க.., தன் பங்கை, முனைப்புடன் செய்து வருகிறது. தி.மு.க.,வின், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய பங்குக்கான நிதி பெற்று, 10 கோடி ரூபாயில், சேதமான பகுதிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.நீலகிரி, எம்.பி., ராஜா, ஊட்டி, எம்.எல்.ஏ., கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Leave a Reply