முன் அறிவிப்பின்றி அன்னபூர்ணா ஹோட்டலின் இடம் இடிக்கப்பட்டதில் 4 ஊழியர்கள் காயம்

கோவையில் பிரபல மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அருகே உள்ள பிரபல ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இடப்பிரச்சனையில், முன் அறிவிப்பின்றி ஹோட்டலின் இடம் இடிக்கப்பட்டதில் 4 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

கோவை நீதிமன்றம் அருகே கே.ஜி என்ற பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பிரபல ஸ்ரீ அன்னபூர்னா ஹோட்டலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 45 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த ஹோட்டலுக்கும் மருத்துவமனைக்கும் இடையே கடந்த சில வருடங்களாக இடத்தகராறு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில், நள்ளிரவு மருத்துவமனை நிர்வாகத்தினர் முன் அறிவிப்பின்றி, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஹோட்டலை இடித்துள்ளனர். இதனால் அப்போது பணியில் இருந்த நான்கு ஊழியர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் சார்பாக மருத்துவமனை நிர்வாகம் மீது கோவை பந்தய சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும்,காவல் துறையினர் பாதுகாப்புடன் ஹோட்டல் நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக ஹோட்டலின் உரிமையாளர் கூறுகையில் கடந்த 45வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்சனை இருந்து வருவதாகவும் தற்போது சமரசம் பேசி வரும் நிலையில் வேண்டுமென்றெ மருத்துவமனை உரிமையாளர்கள் கே.ஜி.பக்தவச்சலம், கே.ஜி.பாலகிருஷ்ணன் கூலியாட்கள் வைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஹோட்டலை இடித்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பாக தன்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு இந்த வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த மருத்துவமணை நிர்வாகத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்படவில்லை.


Leave a Reply