சாய ஆலைக் கழிவுகளால் நொய்யல் ஆற்றில் மலை போல் நுரை! மக்கள் அச்சம்
கோவை ஒண்டிப்புதூர் அருகே நொய்யல் ஆற்றில் கலக்கப்பட்ட சாய ஆலைக் கழிவுகளால் மலை போல் நுரை எழுகிறது. நேரம் கடக்க, கடக்க நுரையின் அளவு அதிகமாகிக் கொண்டே போவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உருவாகி திருப்பூர் வழியாகப் பாய்ந்து கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் ஆறு. பாயும் வழியெல்லாம் விளைநிலங்களை செழிக்க வைத்து, திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் போக்கி வந்த நொய்யல் ஆறு, தற்போது சாயக் கழிவுகளால் பெரும் சவாலை சந்தித்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.இதன் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக வறண்டு கிடந்த நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் வருவதை எண்ணி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருந்த வேளையில், கோவை மாவட்டத்தில் இயங்கும் சட்டவிரோத சாய ஆலைகள், ஆற்றில் கழிவுகளை கலந்து விட்டுள்ளன.இதன் காரணமாக ஒண்டிபுதூர் நெசவாளர் காலனியிலிருந்து பட்டணம் பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தில் 5 அடி வரை நுரை பொங்கி சாலையை ஆக்கிரமித்துள்ளது. சாயக் கழிவுகளால் நொய்யல் ஆறும் கருமை நிறமாக காட்சி அளிப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
நேரம் கடக்க கடக்க ஆற்றில் இருந்து பொங்கும் நுரையின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லாரி, கார் போன்ற வாகனங்கள் மட்டுமே கடந்து செல்கின்றன.வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து, வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ள அபாய தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




