--- --:--:-- --

வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு : 350 போலீசார் கண்காணிப்பு

ac9f0bdc-9c20-4239-953f-8032c49f16f1

வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 350 போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த் உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

இதற்கான வாக்குப் பதிவு மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவின்போது 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மண்டலத் தேர்தல் அலுவலர்கள் மூலமாக துணை ராணுவப் பாதுகாப்புடன் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

 

அங்கு பேரவைத் தொகுதி வாரியாக ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்த அறைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.இதில், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சுதன் பண்டரிநாத் கதே, காவல் பார்வையாளர் ஆதித்யகுமார், சிறப்புப் பார்வையாளர் முரளிகுமார், செலவினப் பார்வையாளர் வினய்குமார்சிங், மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் உள்ளேயும், வெளியேயும் மொத்தம் 80 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ஏடிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு ஒரு டிஎஸ்பி, 5 காவல் ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்களுடன் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என 240 காவலர்கள், துணை ராணுவப் படையினர் 110 பேர் என மொத்தம் 350 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 8 மணி முதல் பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பதால் அதிகபட்சம் 21 சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon