காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன் கலைந்த குமாரசாமி அரசும் இந்த அணையை கட்டியே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தது.கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, முதன் முறையாக டெல்லிக்கு சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை குறித்து பேசினார். அப்போது கடிதம் ஒன்றையும் பிரதமர் மோடியிடம் வழங்கினார் எடியூரப்பா.
அந்த கடிதத்தில் மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்த சட்டமோ, விதியோ கூறவில்லை எனவும், மேகதாது அணை கட்டப்படவுள்ள இடம் கர்நாடகா எல்லைக்குள் இருப்பதால், கர்நாடகா எல்லைக்குள் அணை கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு தெரிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வு நடத்த வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர்குழு நிராகரிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால், அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதிக்க முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்த்துள்ளது. தமிழகம், கர்நாடகம் இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளார்.