முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்து இன்றோடு ஒருவருடம் ஆகிறது. இதனால் தமிழகம் முழுக்க திமுகவினர் உட்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

அதேபோல் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அவரது தொண்டர்கள், அரசியல்வாதிகள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இதனால் காலை முழுக்க அவரின் நினைவிடத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இந்த நிலையில் திமுக கட்சி சார்பாக கருணாநிதியின் சிலை சென்னையில் திறக்கப்பட்டது.இந்த சிலையை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் சில கடைசி கட்ட பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு முடிந்தது.இந்த சிலை 6.3 அடி அகலம், 6.5 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் மேல் பகுதியில் கருணாநிதியின் ஐந்து கட்டளைகள் என்று ஐந்து வாசகம் இடம்பெற்றுள்ளது. அமர்ந்த நிலையில் அவர் எழுதுவது போல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேறு முக்கிய தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் சிலை திறப்பு விழாவும் மிக மிக எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது.இந்த விழாவிற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், ஃபரூக் அப்துல்லா வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.


Leave a Reply