காலி பால் பாக்கெட்டுகளை திருப்பி அளிப்பது தொடர்பாக ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட விசாரணை அழைப்புகள் ஆவின் நிர்வாகத்துக்கு வந்துள்ளன. மேலும், விற்பனைக்காக அனுப்பப்படும் 25 லட்சம் பால் பாக்கெட்டுகளையும் அப்படியே திரும்ப சேகரிக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஓரிரு மாதங்களில் இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 34 லட்சத்துக்கும் அதிகமான லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 12 ஆயிரத்து 585 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும் பாலானது 19 மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் சென்னை பெருநகரில் உள்ள பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு தினசரி 25 லட்சம் லிட்டர் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் பாலானது அரை லிட்டர் என்ற அளவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆவின் பால் தொடர்ந்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலேயே அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் போன்ற அத்தியாவசியப் பொருளுக்கு தமிழக அரசு விதிவிலக்கு அளித்தாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலை பாக்கெட்டுக்குப் பதிலாக பாட்டில்களில் அடைத்து விற்கலாம் என அறிவுறுத்தியது. இந்த நிலையில், பால் பாக்கெட் காலி கவர்களை முகவர்களிடம் அளித்து பொது மக்கள் பணம் பெறலாம் என ஆவின் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்திருந்தது.எந்தெந்த இடங்களில் எப்படி அளிக்கலாம் என்பது தொடர்பான சந்தேகங்களை விளக்கம் பெற தனி தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது. ஆவின் நிறுவனத்தின் இந்தத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அதன் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆவின் பால் நாளொன்றுக்கு 25 லட்சம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 25 லட்சம் பாக்கெட்டுகளையும் பொது மக்களிடம் இருந்து அப்படியே காலி பாக்கெட்டுகளாக திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் காலி பாக்கெட் கவர்களை எங்கு, எப்படி அளிப்பது என்பது குறித்து விசாரித்து அறிந்துள்ளனர்.
இந்த காலி பாக்கெட்டுகளை அப்படியே ஆவின் நிறுவனம் பெற்றாலும் அதனை மறுசுழற்சி செய்யவோ, மீண்டும் பயன்படுத்தவோ முடியாது. எனவே, அவை பொது ஏலத்துக்கு மட்டுமே விடப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஓரிரு மாதங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ஆவின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.