திருப்பூரில் எம்.இ.ஐ.எஸ்., சலுகை திடீர் நிறுத்தம்!

திருப்பூரில் ‘எம்.இ.ஐ.எஸ்., சலுகை, திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என்று, ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர்.நாட்டின் ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும்வகையில், மத்திய அரசு, டியூட்டி டிராபேக், ஸ்டேட் லெவிஸ், எம்.இ.ஐ.எஸ்., (மெர்ச்சன்டைஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரம் இந்தியா திட்டம்) பல்வேறு வகை சலுகைகளை வழங்குகிறது.

 

சர்வதேச வர்த்தக சந்தையில் ஏற்பட்டுவரும் போட்டிகளை எதிர்கொள்வதற்கு, திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசு சலுகைகளே கைகொடுத்துவருகிறது. கடந்த 2017, ஜூலை 1ல், ஜி.எஸ்.டி., வரி அமலானது; தொடர்ச்சியாக, ஏற்றுமதிச் சலுகை விகிதங்களை மத்திய அரசு குறைத்தது.இதன் எதிரொலியாக, கடந்த 2017– 18ல் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, எட்டு சதவீத சரிவை சந்தித்தது.

இதையடுத்து, ஏற்றுமதிச் சலுகை விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியது.ஜி.எஸ்.டி.,க்கு முன்புவரை, ஏற்றுமதி ஆடை மதிப்பில் 2 சதவீதம் வழங்கப்பட்டுவந்த எம்.இ.ஐ.எஸ்., சலுகை, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஸ்டேட் லெவிஸ், டிராபேக் உள்ளிட்ட இதர சலுகை விகிதங்களும் அதிகரிக்கப்பட்டன. சலுகை உயர்வுக்குப்பின், ஆடை ஏற்றுமதி வர்த்தகம், வளர்ச்சியை நோக்கி பயணித்துவருகிறது.ஒரு நாட்டின் தனிநபர் வருவாய் தொடர்ந்து மூன்று ஆண்டுகள், ஆயிரம் டாலருக்கு அதிகமானால், அந்நாடு, ஏற்றுமதியாளர்களுக்கு நேரடி சலுகைகள் வழங்க கூடாது என்பது, உலக வர்த்தக மைய விதி.இந்த விதிப்படி, இந்தியா, தனது ஏற்றுமதியாளருக்கு வழங்கும் நேரடி சலுகைகளை நிறுத்தவேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக மையத்தில் புகார் அளித்தார்.

 

நேரடிச் சலுகையான எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தை மத்திய அரசு எப்போதுவேண்டுமானாலும் நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனாலும், மத்திய அரசு, சலுகைகளை தொடர்ந்து வழங்கிவந்தது.இந்நிலையில், தற்போது, எம்.இ.ஐ.எஸ்., திட்டம், கடந்த ஜூலை 31ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக, மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, சலுகை திட்டம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply