நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் கேள்வி

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களித்து கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, 2017 செப்டம்பர் 22 ஆம் தேதி திருப்பி அனுப்பட்ட நீட் தொடர்பான மசோதாவை 3 நாட்களில் தமிழக அரசு பெற்றுக்கொண்டதற்கான சான்றொப்பத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பழைய மசோதா நிராகரிக்கப்பட்டால் மீண்டும் புதிய மசோதா அனுப்ப விதிகள் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

மேலும் நீட் விலக்கு தொடர்பாக மக்கள் பரவலாக பேசி வந்த நிலையில் தமிழக அரசு மவுனம் காத்தது ஏன் எனவும் எந்த ஒரு பொதுத்தளத்திலும் தகவலை வெளியிடாதது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு இவ்வளவு நாட்கள் நிலுவையில் இருந்தும் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவல் உங்கள் வாயிலிருந்து வரவில்லை எனவும் நீட் விலக்கு மசோதா நிறுத்திவைப்பு என்றாலே திருப்பி அனுப்பப்பட்டது என்றுதான் அர்த்தம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்களிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.


Leave a Reply