இந்திய சரக்குக் கப்பலில் பதுங்கி மாலத்தீவை விட்டு தப்ப முயற்சித்த அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் நடுக் கடலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலத்தீவுக்கு தூத்துக்குடியில் இருந்து கருங்கல் ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் ஒன்று சென்றது. சரக்குகளை இறக்கிவிட்டு அந்த கப்பல் இந்தியா திரும்பி வந்து கொண்டிருந்தது.அப்போது சரக்குக் கப்பலில் கூடுதலாக சிலர் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உளவுத்துறையினரும் கடற்படை அதிகாரிகளும் நடுக்கடலில் அங்குலம் அங்குலமாக சரக்குக் கப்பலை சோதனையிட்டனர்.அப்போது கப்பலில் பதுங்கி இருந்த நபர் சிக்கினார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் என்பதும் மாலத்தீவை விட்டு தப்பி வெளியேற முயற்சித்தே கப்பலில் ஏறியதாகவும் தெரியவந்தது.
அவரிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அகமது அதிப்புடன் மேலும் சிலர் பிடிபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாலத்தீவு அரசு தரப்பில் இன்னமும் உறுதி செய்யப்பட்ட தகவல் எதுவும் வரவில்லை.