ஜூலை 31 அன்று மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 108 உறுப்பினர்களும் எதிராக 13 பேரும் வாக்களித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் இப்போது மீண்டும் 2019 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகனச் சட்டத்திருத்தமாக மக்களவையில் நீண்டநேர விவாதங்களுக்குப் பிறகு, வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியிருக்கிறது.
2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டு, 16 ஆவது மக்களவை நிறைவுபெற்றபோது தகுதி இழந்தது. மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில், சில குற்றங்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகியவை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச அபராதம் என்பது ரூ. 100 ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல தகுதியின்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.மேலும் ஆபத்தான வகையில் வேகமாக வாகனத்தை ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என இருந்தது. ஆனால் அது இனி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் வசூலிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது. அதேபோல பெர்மிட் இல்லாத வாகனங்களை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது இனி 10 ஆயிரம் ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இன்றி வாகனத்தை ஓட்டும் பட்சத்தில் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ள நிலையில் அது இனி 2 ஆயிரம் ரூபாய் ஆகிறது.
இதில் மிக முக்கியமான ஒன்றாக சிறுவர்கள் வாகனம் இயக்கி பிடிபட்டால் தரப்படும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவ்வாகனத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்படும். அதேபோல வாகனத்தை ஒட்டிய சிறுவர் மீதும் சிறார் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 உறுப்பினர்களும்,எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.