தொழில்கடனை திருப்பிச்செலுத்த வந்த விவசாயிடம் அவரது கூட்டாளிகளின் கடனையும் கட்ட வங்கி மேலாளர் வற்புறுத்தியதால் விஷமருந்தி விவசாயி தற்கொலை

வாங்கிய தொழில்கடனை திருப்பிச்செலுத்த வந்த விவசாயிடம் அவரது கூட்டாளிகளின் கடனையும் கட்ட வங்கி மேலாளர் வற்புறுத்தியதால் விஷமருந்தி விவசாயி தற்கொலை.போலீசார் விசாரணை.சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி (62). இவருக்கு ஒரு மகளும்,மகனும் உள்ளனர். இந்நிலையில் பூபதிக்கு தெரிந்தவர்கள் 10 பேர் சேர்ந்து அந்தியூரில் பால்பண்ணை தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

 

அப்போது,பூபதி தனது விவசாய நிலத்தையும், மற்றவர்களின் சொத்துக்களையும் அடகு வைத்து 9 கோடி ரூபாய் தொழில் தொடங்க வெரைட்டி ஹால் சாலையிலுள்ள இந்தியன் வங்கியில் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பூபதி குறைவான தொகை மட்டுமே வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அனைவரும் சேர்ந்து கடன் வாங்கிய தொகையில் 6 மாதங்களில் 50 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டியுள்ளனர். மீதி தொகையை கட்டாமல் இருந்துள்ளனர்.

இதில் பூபதியின் விவசாய நிலம் தவிர மற்ற அனைவர் சொத்துக்களின் மதிப்பும் மிக குறைவாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பூபதியினுடைய விவசாய நிலம் சாலையின் அருகிலே இருப்பதால்,அதிக விலைக்கு விற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் அதிக தொகை கட்டக்கோரி பூபதிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

 

வங்கி மேலாளரிடம் தனது பணத்தை மட்டும் கட்ட அனுமதி வழங்கும்படி , பூபதி பத்து முறைக்கு மேல் கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் பூபதி கட்ட வேண்டிய 30 லட்சத்திற்கு பதிலாக , இரண்டு கோடி ரூபாய் வரை பணம் கட்ட வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வெரைட்டிஹால் சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் தலைமையகத்துக்கு பூபதி வந்துள்ளார்.

அப்போது,மேலாளரிடம் தன்னுடைய கடனுக்கான தொகை 30 லட்ச ரூபாயை கட்ட அனுமதிக்கும் படி பேசியுள்ளார்.மேலாளர் அனைவருடைய கடனையும் சேர்த்து கட்ட சொல்லியுள்ளதாக தெரிகிறது.இதனால் மனமுடைந்த பூபதி விஷ மருந்தி சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வங்கி அதிகாரி மற்றும் வெரைட்டி ஹால் காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உறவினர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும்,தமிழக முதல்வருக்கு பூபதி நன்கு அறிமுகம் ஆனவர் எனவும், தங்களது குடும்பம் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருவதாகவும், தங்களுடைய நிலத்திற்கான பணத்தை தாங்கள் கட்டுவதாகவும்,அந்த நிலத்தினை தமிழக முதல்வர் மீட்டுத்தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து பூபதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு,அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனையடுத்து இறுதிச்சடங்கிற்காக பூபதியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வாங்கிய கடனை கட்டச்சொல்லி வங்கி மேலாளர் வற்புறுத்தியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply