காலி பால் கவர்களை முகவர்களிடம் கொடுத்து ஒன்றுக்கு 10 பைசா பெற்றுக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது. இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் பாலினை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு காலி பாக்கெட் கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவிக்கிறது.
ஆவின் நிர்வாகம் இல்லாத பட்சத்தில் காலி பால் பாக்கெட் கவர்களை எங்கு கொண்டு கொடுப்பது என்று தெரியாமல் பொதுமக்கள் குப்பைகளில் வீசி விடுகின்றனர்.எனவே ஆவின் நிறுவனத்தைப் போன்று காலி பால் பாக்கெட் கவர்களை பொதுமக்களிடம் இருந்து வாங்குவதற்கு தனியார் பால் நிறுவனங்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.