தற்போதுள்ள இளம் வீரர்கள் தங்களது வயதினை காட்டிலும் அதிக தன்னம்பிக்கையுடனும், பக்குவத்துடனும் இருப்பதாக கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் வாய்ப்பளிக்கப்படும். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இளம் வீரர்களை புகழ்ந்து விராட் கோலி பேசியுள்ளார்.டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இளம் வீரர்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறார்கள்.
அவர்களின் தன்னம்பிக்கையை பார்க்கும்போது வியப்பாக உள்ளது. நாங்கள் 19-20 வயதில் இருக்கும் போது, இதுபோன்ற வீரர்கள் பாதியளவுகூட இல்லை. ஆனால் இப்போது வருபவர்கள் வயதை மீறி முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள்.
ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களால் அவர்களது திறமை வளர்ந்துள்ளது. தன்னம்பிக்கையுடன் அவர்கள் வருகிறார்கள். தங்களது தவறுகளை உடனடியாக சரிசெய்து கொள்கிறார்கள். ஏனெனில், ஏற்கனவே அவர்கள் மக்கள் திரள் முன்பு விளையாடியிருக்கிறார்கள். ஆனால், நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற நோக்கம் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஓய்வு அறை சூழல் குறித்து விராட் பேசுகையில், ‘ஓய்வு அறையில் வீரர்களை திட்டும் பழக்கும் இல்லை. தோனி எப்படி நட்புடன் குல்தீப் உடன் இருந்தாரோ அதேபோல் நானும் இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.