அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “உமா மகேஸ்வரி மிகச் சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர். சென்னை மாநகராட்சியின் மேயராக நான் இருந்தபோது அவர் நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தார். கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாகப் பழகி நன்மதிப்பு பெற்றவர்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் கைகளால் பாவேந்தர் விருது பெற்ற பெருமைக்கு உரியவர். அவருடைய படுகொலை மிகுந்த வருத்தம் தருகிறது.இந்த ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. உண்மைக் குற்றவாளியைக் கண்டறிந்து விரைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, பிரேதப் பரிசோதனை முடித்து உமா மகேஸ்வரியின் மகளிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகு சங்கரன் உடல்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயமும் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட காயமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பணிப்பெண் மாரி உடலில் இவ்வளவு கொடூரமான காயங்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்துக்கும் வடமாநில கொள்ளைக் கும்பலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.