நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடும் அமளி! அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்த அமித்ஷாவின் பார்வை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், ஜப்பானில் ஒசாகா நகரில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது தன்னை சந்தித்த பிரதமர் மோடி, காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தனது உதவியை நாடியதாக குறிப்பிட்டு இந்தியாவை அதிர வைத்தார்.

 

அப்போது அவர், 2 வாரங்களுக்கு முன்பாக நான் பிரதமர் மோடியுடன் இருந்தேன்.அப்போது காஷ்மீர் பிரச்சினை பற்றி நாங்கள் பேசினோம். அவர் என்னிடம் உண்மையில் இதில் நீங்கள் மத்தியஸ்தராக அல்லது நடுவராக இருக்க விரும்புகிறீர்களா என கேட்டார். எதில் என்று கேட்டேன். அவர் காஷ்மீர் என்று சொன்னார் என குறிப்பிட்டார்.

 

இது குறித்த தகவல்கள் வெளியானதும் இந்தியா மறுத்தது. இது தொடர்பாக உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் ஒருபோதும் டிரம்பின் மத்தியஸ்தத்தை பிரதமர் மோடி நாடியது இல்லை என கூறியது.

இந்த விவகாரம், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று பெரும் புயலைக்கிளப்பியது. பின்னர் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி எழுப்பினார். அவர், “டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து மிக முக்கியமானது. இதில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்” என குரல் கொடுத்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கத் ராய், “டிரம்பின் கருத்து, இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக உள்ளது” என சாடினார்.

 

தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு, “வெளியுறவு கொள்கை பிரச்சினையில், அதுவும் காஷ்மீர் பிரச்சினையில் யாருடைய தலையீட்டையும் நம் நாடு நாடியது இல்லை. இந்தப் பிரச்சினையில் பிரதமர்தான் தொடர்புடையவர். எனவே அவர்தான் சபையில் விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆனால் மத்திய அரசின் சார்பில், வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க முயற்சித்தார். அதை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு எதிர்த்து, அமளியில் ஈடுபட்டன.அப்போது திடீரென எழுந்து நின்ற அமித்ஷா, அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, ஒரு பார்வை பார்த்தார். அப்படியே அனைவரும் அடங்கிப் போய் அமர்ந்தனர். இதையடுத்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது அறிக்கையை வாசித்தார்.


Leave a Reply