திருப்பூரில் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்த குப்பையில் ஏற்பட்ட தீ விபத்து!

திருப்பூர், திருமுருகன் பூண்டி பேரூராட்சி அம்மாபாளையம் பகுதியில் உள்ள கணபதி நகரில் சுப்பிரமணீயம் என்பவருக்கு சொந்தமான பாறைக்குழி உள்ளது. இந்த பாறைக்குழி 80 ஆடி ஆழம் கொண்டது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பாறைக்குழியில் வெடிகள் வைத்தபோது ஊற்றுநீர் வரவே அதற்கு மேல் கருங்கற்களை எடுக்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

 

இந்தநிலையில் பூண்டி பேரூராட்சி சார்பில் அந்த பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. தொடர்ந்து கொட்டப்பட்ட வந்த குப்பைகள் மூலம் பாறைக்குழி பாதியை மூடிக்கொண்டது. குப்பைகள் கொட்டும்போது முதலில் ஒரு அடிக்கு குப்பையும், பின்னர் அந்த குப்பை மக்க ஒரு அடிக்கு மணலும் கொட்டவேண்டும். ஆனால் குப்பைகள் கொட்டப்பட்ட வந்த நாள் முதலே மணல் கொட்டப்படவில்லை.

இதனால் குப்பைகள் மட்டுமே குவிந்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் அந்த பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பையில் இருந்து புகை வந்தது. அப்போது காற்று வேகமாக வீசவே குப்பைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. முதலில் தீயின் தன்மை குறைவாக இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த தீயானது பாறைக்குழியில் கொட்டப்பட்டு இருந்த அணைத்து குப்பைகளுக்கும் பரவ, தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

 

இதனால் கடுமையான புகை மூட்டம் எழவே பூண்டி, அம்மாபாளையம், நெசவாளர் காலனி எம்.ஜி.ஆர் நகர் பகுதி முழுவதும் புகை சூழ தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மூச்சு விடவே கஷ்டப்பட்டு அங்கிருந்து நகர்ந்தனர். மேலும் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவ வந்தது.

 

ஆனால் அங்கிருந்தவர்கள் வீடுகளில் சேமித்து வைத்து இருந்த இருக்கும் தண்ணீரை ஊற்றி அந்த தீயை அணைத்தனர். அதனால் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வரும் முன்னாள் பூண்டி தி.மு.க நகர செயலாளர் குமார் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கும், அனுப்பர்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

 

இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் , அவிநாசி தீயணைப்பு நிலையத்தில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகள் வந்தது. இதில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பூண்டி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் அந்த பாறைக்குழியில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து தீயை 4 மணிநேரம் போராடி அணைத்தனர். இருந்தாலும் குப்பையில் இருந்து புகை வந்துகொண்டே இருக்கிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply