திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம், ஸ்ரீ மஹாதேவ் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் யோகா கல்ச்சுரல் சொஸைட்டி சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் – 2019 க்கான போட்டிகள் திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்க வளாகத்தில் நடந்தது. போட்டியானது பார்வர்ட், பேக்வார்ட், டிவிஸ்ட்டிங், ஹேண்ட் பாலன்ஸ், லெக் பாலன்ஸ் ஆகிய பிரிவுகளில் 6 – 8, 9 – 11, 12 – 15, 16 – 21 ஆகிய வயது பிரிவில் நடந்தது.

போட்டியில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 கல்லூரி மாணவிகள் உள்பட 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

விழாவுக்கு திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்க தலைவர் சையது முஹம்மது அப்துல் கரீம் தலைமை தாங்கி யோகா போட்டியை தொடக்கி வைத்தார். திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்க செயலாளர் மெல்வின் பாபு முன்னிலை வகித்தார். ஸ்ரீ மஹாதேவ் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் சரண்குமார் வரவேற்றார். போட்டியின் முடிவில் மாணவிகள் பிரிவில் பிளாட்டோ அகாடெமி பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீநிதி சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.

ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி மோக்ஷிதா 2 ம் இடமும், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவி சேதன்யா கௌரி 3 ம் இடமும் பெற்றார். அதேபோல் மாணவர்களுக்கான பிரிவில் கோவை பீளமேடு கோபால்டு நாயுடு பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரித்திவிராஜ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.

திருப்பூர் பாரதி கிட்ஸ் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவர் முஹம்மது ஷஃபி, ஸ்பிரிங் மவுண்ட் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர் தரணீதரன் ஆகியோர் 2 ம் இடமும், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ராகுல் 3ம் இடமும் பெற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ரோட்டரி ஆளுநர் கார்த்திகேயன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். முடிவில் ஸ்ரீ மஹாதேவ் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பவித்ராதேவி நன்றி கூறினார். சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 2ம், 3ம் இடம் பெற்ற மாணவர்கள் வருகிற டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் நடக்கும் யோகா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் மாணவர்களுக்கு இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் தலைவர் மாரிமுத்து, செயலாளர் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் முதலிடம் பெற்ற மாணவர் பிரித்திவிராஜ் மற்றும் மாணவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு 30 ஆயிரம், 2ம் இடம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம், 3 ம் இடம் பெற்றவர்களுக்கு 10 ஆயிரம் என செலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply