விசா மோசடியினால் அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை

அமெரிக்க விசா சட்டங்களை ஏமாற்றி, நுாற்றுக்கணக்கான வெளிநாட்டினரை, சட்ட விரோதமாக குடியேற்றம் செய்த குற்றத்திற்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஹேமா படேல் என்ற பெண்ணுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மோசடி குற்றங்களுக்காக, ஹேமா படேலின், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, வீடு உட்பட சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.நீண்ட காலமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வந்த இந்த பெண்ணின் உதவியாளருக்கும், கடந்த ஆண்டு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், அவரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், அப்போது பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல், சில தினங்களுக்கு முன்பு, எச்1-பி’ விசா மோசடி செய்தததாக, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த விஜய் மனோ வயது 39, வெங்கட்ரமணா மனனம் வயது 47, பெர்னாண்டோ சில்வா வயது 53 மற்றும் கலிபோர்னியாவை சேர்ந்த சதீஸ் வெமுரி வயது 52 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் இணைந்து 2 ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் ‘எச்1-பி’ விசா திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது, ரகசிய விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, இவர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு எச்1-பி விசா மூலம் ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்திக் கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், அபராதத் தொகை செலுத்தி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றங்கள் உறுதிபடுத்தப்படுமானால், ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply