எல்லா திட்டங்களையுமே இப்படி எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்? முதல்வர் பழனிசாமி

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் பேச்சு நடத்தி சுமூக சூழலை ஏற்படுத்த, தமிழக எம்பி-க்கள் நடவடிக்கை வேண்டும் என முதல்வர் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.இவ்விகாரத்தில் விவசாயிகளை திமுக எம்பி-க்கள் போராட்டம் செய்வதற்கு தூண்டி விடுவதாக, அமைச்சர் தங்கமணி கூறியதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இலங்கைக்கு கடலுக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வதாகவும், அது போல பூமிக்கடியில் மின்சார கேபிள்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன் கேட்டு கொண்டதை குறிப்பிட்டு அமைச்சர் தங்கமணி பேசினார்.

மதுரையிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கு கடலுக்கு கீழே கேபிள் பதிப்பதற்கு, 7 மடங்கு செலவு அதிகமாவதாக அவர் கூறினார்.இதனால் உயர்மின் கோபுரம் அமைத்து தான் கொண்டு செல்ல முடியும் என கூறினார்.இச்சூழலில் தமிழகத்தில் வரும் மின்சாரத்திற்கு உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என, திமுக எம்பி-க்கள் சிலர் விவசாயிகளை தூண்டி விடுவதாக அமைச்சர் புகார் தெரிவித்தார்.

 

திமுக எம்பி-க்களை தரக்குறைவாக பேசியதாக கூறி அக்கட்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தார்.பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய ஸ்டாலின், திமுக-வினர் தூண்டி விடுவதாக கூறுவதை விட்டு போராடும் மக்களை சமாதானப்படுத்துங்கள் என்றார்.

அப்போது பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி நாடாளுமன்ற எம்பி ஒருவர் டியூப்லைட்டுடன் போராட்டம் நடத்தினால், மக்கள் பயப்பட மாட்டார்களா என வினவினார். மேலும் எல்லா திட்டங்களையுமே இப்படி எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும் என்றார்.

 

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் பேசி தமிழக எம்பிக்கள் பிரச்சனைக்கு சுமூக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Leave a Reply