கரடி வரும், போகும் ஆனா, எந்தத் தொந்தரவும் இல்ல! பூட்டிகிடந்த வீட்டுக்குள் கரடி இறப்பு

நீலகிரி மாவட்டத்தில், காட்டுயிர்களின் இழப்பு அன்றாட நிகழ்வாக மாறிவருகிறது. தண்ணீர், உணவு தேடல் போராட்டத்தில் ஏராளமான காட்டுயிர்கள் செத்தும் சாகடிக்கப்படுவதும் வேதனையான உண்மை.கடந்த மூன்று மாதங்களில், மூன்று கரடிகள் இறந்துள்ளன.

 

பந்தலூர் சேரம்பாடி பகுதியில் 4 யானைகளின் மர்ம மரணத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு, பார்சன்ஸ் வேலி பகுதியில் இறந்த புலியோடு சேர்த்து, 5 ஆண்டுகளில் மொத்தம் 4 புலிகள் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்துள்ளன.

 

இந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சன்னிசைடு பகுதியில், பூட்டிய வீட்டுக்குள் கரடி இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வனப் பகுதியையொட்டிய சன்னிசைடு தேயிலைட் தோட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே கரடி, காட்டுமாடுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.

நான்கு நாள்களுக்கு முன்பு உணவு தேடி கரடி ஒன்று தேயிலைத் தோட்டப் பகுதியில் உலவியது. இந்தப் பகுதியில், பயன்பாட்டில் இல்லாத தொழிலாளர் குடியிருப்பு உள்ளது. உணவு தேடி வந்த கரடி, வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்துள்ளது.

 

இறந்த கரடியின் உடலை கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்தனர்.பின்னர் வெளியே வர முயன்று, அது முடியாமல் போகவே, பூட்டிய வீட்டுக்குள் சிக்கி தண்ணீர் இல்லாமல் உயிரிழந்துள்ளது. இன்று, தேயிலைத் தோட்டத்துக்கு இலை பறிக்க தொழிலாளர்கள் சென்றபோது, வீட்டின் அருகில் துர்நாற்றம் வீசியுள்ளது.

 

கதவைத் திறந்து பார்த்தபோது, வீட்டினுள் கரடி ஒன்று இறந்துகிடந்துள்ளது. இதையடுத்து, வனத்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வந்து பார்த்தது, இறந்தது ஆண் கரடி என்றும் 7 வயது இருக்கக்கூடும் என்றும் உறுதி செய்தனர்.

பின்னர், கால்நடை மருத்துவர்களைக்கொண்டு உடற்கூறு ஆய்வு செய்த பின் கரடியின் உடலை எரித்தனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், “இந்த லைன் வீட்ல மக்கள் யாரும் இல்ல. கரடி வரும், போகும். ஆனா, எந்தத் தொந்தரவும் இல்ல. இன்னைக்கி காலைல வேலைக்கு வரும்போது, மோசமான வாடையா இருந்தது.

 

வீட்டின் உள்ளே சென்று பாத்தோம். அங்கு, கரடி செத்துக்கிடந்தது. உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் சொன்னோம்” என்றார்.கரடி இறப்பு குறித்து காட்டுயிர் ஆர்வலர் ஒருவர் உண்மையைக் கண்டறிய வனத்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.


Leave a Reply