மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி, குவாரி அனுமதி சீட்டில் மோசடி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சென்னிமலை பகுதியில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல கல்குவாரி உரிமையாளர்கள் கனிம அனுப்புகை சீட்டில் மேஜிக் பேனாவால் எழுதி மோசடி செய்து ஒரே கனிம அனுப்புகை சீட்டின் மூலம் ஏராளமான லாரிகளில் கனிமங்களை கடத்துவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த மோசடி நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தற்போது தான் அம்பலம் ஆகியுள்ளது.

 

கல்குவாரிகளில் உடைத்து எடுக்கப்படும் ஜல்லி கற்கள், ரஃப் கல், மேடை மண், சரளை மண், எம்.சாண்ட் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல கனிம வளத்துறை அதிகாரிகளிடம் உரிய வரி செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் அந்த அனுமதி சீட்டு கனிமங்களை கொண்டு செல்லும் லாரிகளில் வைத்து இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்லும் போதும் குவாரியிலிருந்து கனிமங்கள் கொண்டு செல்லப்படும் தேதி, நேரம், ஓட்டுநர் பெயர் மற்றும் உத்தேச தூரம் குறிப்பிட்டு குவாரி உரிமையாளர் கையொப்பம் இட்டு இந்த அனுப்புகை சீட்டை அனுமதிக்க வேண்டும் என்பது விதி.

 

இந்த சீட்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் முத்திரை மற்றும் கையொப்பம் , அரசின் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். இதில் ஒரு லோடு கொண்டு செல்ல ஒரு ஒப்புகை சீட்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் கனிமம் கொண்டு செல்லும் போது துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்யும் போது இதனை கட்டாயம் காண்பிக்க வேண்டும். இந்த அனுமதி சீட்டு இல்லை எனில், லாரியினை பறிமுதல் செய்யவும், ஓட்டுநரை கைது செய்யவும், சட்டத்தில் வழிமுறை உள்ளது.

 

தற்போது தீயில் வாட்டினால்,எழுத்துகள் மறையும் தன்மை கொண்ட மேஜிக் பேனாவால் இந்த அனுமதி சீட்டில் விவரங்களை குறிப்பிட்டு பெரிய அளவில் மோசடி நடந்து வந்துள்ளது. சென்னிமலை மற்றும் பெருந்துறை பகுதிகளில் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் ஒரு அனுப்புகை சீட்டினை வைத்து பல லாரிகளில் பல லோடு கனிமங்களை சட்டத்திற்கு புறம்பாக கடத்தி விற்பனை செய்கின்றனர் என்றும் இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.


Leave a Reply