ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். பெரிய சிறுவத்தூரை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் பிரசவத்திற்காக மேலூர்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கௌசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் குழந்தையை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கௌசல்யாவிற்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதால் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கௌசல்யாவின் உடல் நிலை மோசமாகவே மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அங்கிருந்து அவரை விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து கௌசல்யாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மூச்சு திணரலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply