திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக பக்கிங் காம் கால்வாய் வழியாக உள்ள சாலையில் தற்காலிகமாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில் நேற்று இரவு ஹைதரபாத்தில் இருந்து சுமார் 24 சக்கரங்கள் பொருத்தி லாரி ஒன்று சுமார் 20 மீட்டர் உயரம் உள்ள இரும்பு உருளையை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்துள்ளது.
அப்போது முன்னே சென்ற லாரியை இந்த லாரி முந்தி செல்ல முயன்ற போது இரும்பு உருளை சாலையோரம் இருந்த வீடுகளின் அருகே சரிந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து அந்த லாரியின் ஓட்டுநர் தப்பி சென்று விட்ட நிலையில் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வெளியே ஓடி வந்து உள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவன் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளதோடு வீடுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த லாரியின் கண்ணாடியை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சாத்தாங்காடு போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. குறுகிய சாலை வழியாக கனரக வாகனத்தை அனுமதித்த போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பி சென்ற ஓட்டுநரை தேடி வருகின்றனர்.