ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரது மகள் திவ்யகரசி. நாகேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள இந்து ஆரம்ப பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். திவ்யகரசியும் அவரது சகோதரன் லோகேஸ்வரனும் கார்த்திக் என்பவனது ஷேர் ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு பள்ளிக்கு செல்வது வழக்கம். காலை 15 குழந்தைகளை தனது ஆட்டோவில் திணித்து கொண்ட கார்த்திக் , திவ்யகரசியை ஓட்டுனர் இருக்கையில் ஒரு ஓரத்தில் அமர வைத்து அழைத்து சென்றுள்ளார்.
பள்ளி செல்லும் வழியில் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் ஆட்டோ ஏறி இறங்கி ஆடி அசைந்து சென்று இருக்கிறது. அவ்வாறு செல்லும் போது ஓட்டுனர் இருக்கையில் ஓரத்தில் அமர்ந்து இருந்த குழந்தை திவ்யகரசி பிடிமானத்தை இழந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் குழந்தையின் சடலத்தை பார்த்து அவரது பெற்றோர் கதறிய காட்சி கண்போரை வேதனையில் ஆழ்த்தியது. விதிமுறைகளை மீறி ஆட்டோவில் அதிக குழந்தைகளை அழைத்து சென்று சிறுமியின் இறப்புக்கு காரணமான ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் கைது செய்யப்பட்டான். ஆட்டோவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை, அதிலும் குறிப்பாக குழந்தைகளை ஏற்ற கூடாது என அறிவுறுத்தினாலும் , பேராசை பிடித்த சிலர் விதிகளை மதிப்பதோ, கடை பிடிப்பதோ இல்லை.
இதனால் ஏராளமான உயிரிழப்புகளும், உறுப்புகளை இழக்கும் நிலையும் ஏற்படுகின்றன. இது போன்ற ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அவர்களை கண்டு கொள்வதில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரும் அவர்கள் எவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றனர் என்பதை கண்காணிக்கவில்லை என்றால் இது போன்ற பேரிழப்புகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் ஆகியுள்ளது.