சென்னை நெற்குன்றத்தில் தனியார் பள்ளியின் வாயிலை மூடிக்கொண்டு உள்ளே மது அருந்தி அடாவடி செய்த நபர்களை பெற்றோர்கள் விரட்டி அடித்தனர். நெற்குன்றத்தில் உள்ள ரவீந்திர பாரதி குளோபல் பள்ளிக்குள் வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு சிலர் நுழைந்தனர். இரவு முழுவதும் மது அருந்திய அவர்கள் காலையில் பள்ளி வாயிலை மூடிக்கொண்டு சீட்டு ஆட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். காலையில் பிள்ளைகளை பள்ளியில் விட வந்த பெற்றோர் இதை கண்டு ஆத்திரமுற்று உள்ளே இருந்தவர்களுடன் வாக்கு வாதம் செய்தனர்.
திடீரென நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த பெற்றோர் சமூக விரோதிகள் போல் பள்ளியில் குடித்து கும்மாளம் இட்ட நபர்களை விரட்டி அடித்தனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்ட போது பள்ளி அமைந்துள்ள இடம் குறித்து பிரச்சனை நிலுவையில் இருப்பதாக விளக்கம் கொடுத்து உள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற கோயம்பேடு போலீசார் பெற்றோரை சமாதானம் படுத்தினார். பின்னர் பள்ளி வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று வருகிறது.