கணவனையே அடுப்பு ஊதும் குழலால் அடித்து கொலை!

கணவனையே கொலை செய்த பெண்மணியை காவல் துறையினர் கைது செய்து இருக்கிறனர். தந்தை இறக்க தாய் சிறைக்கு செல்ல குழந்தைகளோ அனாதையாகிவிட்டன. தனது கணவரையே அடுப்பு ஊதும் குழலால் அடித்து கொலை செய்த பெண்மணியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகளும், ஒரு மகளும் உள்ளனர்.

 

கல் உடைக்கும் தொழிலாளியாக இருந்த முருகேசன் தனது குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்ததோடு, தானும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தார். அந்த சந்தோசத்திற்கு தான் மது போதை மூலம் இடையூறு ஏற்பட்டது. மது பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் தினம் தோறும் மது அருந்திவிட்டு வந்து மனைவி பஞ்சவர்த்துடன் தகராறும் செய்து வந்துள்ளார். அதே போல மது அருந்திவிட்டு வந்த முருகேசன் மனைவி பஞ்சவர்த்துடன் தகராறில் ஈடுபட்டார்.

 

போதை தலைக்கு ஏறிய நிலையில் பழம் நறுக்குவதற்கு வைத்து இருந்த கத்தியை எடுத்தவர் குழந்தைகளையும் கத்தியால் குத்திவிடுவது போல மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம் அப்பொழுது தான் அந்த பயங்கரமான காரியத்தை செய்துள்ளார். அடுப்பு ஊதும் குழலை எடுத்த பஞ்சவர்ணம் முருகேசன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பஞ்சவர்ணத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதைக்கு அடிமையான தனது தந்தை உயிரிழந்ததாலும், தாய் குற்றவாளியானதாலும், ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றனர்.


Leave a Reply