காவல்துறையை கொண்டு விவசாயிகளை ஒடுக்குவதா ? கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்

விளை நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் மின்கோபுரத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை ஏவிவிடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு நில அளவீடும் பணிகளை துவக்கியுள்ளது.

 

இதனால் கோவை, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் தங்களின் நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எவ்வித முன்அறிவிப்புமின்றி காவல்துறையினர் உதவியுடன் விவசாயிகளின் நிலத்தில் அத்துமீறி காவல்துறையினர் உதவியுடன் பவர்கிரிட் அதிகாரிகள் நுழைவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

போதிய அவகாசம் தராமல் மின்கோபுரம் அமைப்பதற்கான உத்தரவை கையில் வைத்துக்கொண்டு காவல்துறையினரின் உதவியுடன் நிலத்தில் இறங்குவதும்,உத்தரவு எங்கே என கேட்கிற விவசாயிகளின் கைகளில் உத்தரவை திணித்து தங்களின் பணியை துவக்குவது என்பது சர்வாதிகரமான நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,வாழ்வாதாரம் குறித்து அச்சப்படுகிற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்வதும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு கைது செய்வோம் என எச்சரித்து மிரட்டுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

 

இது வன்மையாக கண்டிக்கதக்கது. மின்கோபுரம் அமைப்பது குறித்து விவசாயிகள்,அரசியல் கட்சிகள் வலியுறுத்துகிற மாற்றுத்திட்டத்தை அரசு பரிசீலிப்பதும், விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டுவது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். இதனை விடுத்து அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஒடுக்குமுறை நடவடிக்கையை மேற்கொண்டால் போராட்டம்தான் தீவிரமடையும். இந்த விவகாரத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விவசாயிகளின் கோரிக்கையை கேட்டு உரிய தீர்வை எட்ட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply