பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் கார்டு மூலமாக வருமான வரி செலுத்த அனுமதி

5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று இடைக்கால பட்ஜட்டில் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகை நடப்பு நிதியாண்டில் தொடரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜட்டில் அறிவித்தபடி 5 லட்சம் ரூபாய் பெறுவோருக்கு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என்ற நிலையே தொடர்கிறது.

 

அதே நேரத்தில் வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் ரூபாய் 2 லட்சம் வரை வருமான வரி சலுகை தரலாம் என்ற அளவு தற்போது மேலும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக வீட்டுக்கடன் வட்டிக்கு செலுத்தப்படும் தொகையில் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் வரையில் வரிவிலக்கு பெற முடியும். ஆண்டுக்கு 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 3 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி வசூலிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜட் உரையின் போது தெரிவித்தார்.

 

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வங்கி கணக்கிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக கொடுத்தால் 2 சதவீதம் வரி பிடித்தல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முறையை எளிமைபடுத்தும் நோக்கில் பான் கார்டு இல்லாதவர்கள், ஆதார் கார்டு மூலமாகவே வருமான வரியை செலுத்தலாம் என்ற புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.


Leave a Reply