திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் தபால் நிலைய பாஸ்போர்ட் மையங்களை அமைப்பதற்கான இடம் கிடைக்காததால் பணிகள் தாமதமாகி வருவதாகவும் இடம் கிடைத்தவுடன் விரைவில் மையம் துவங்கப்படும் எனவும் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு அலுவலகங்களில் சிறந்த சேவைக்கான மத்திய அரசின் விருதை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பெற்றுள்ளது. இது தொடர்பாக கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் சிவக்குமார், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 20 முதல் 21 நிமிட காலத்திற்குள் கடவுச்சீட்டுக்களை பதிவு செய்யும் வகையில் செயல்படுவதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், 2013 முதல் 2017 வரையிலும், அதன் பின் தற்போது என 6 முறையாக இவ்விருதை கோவை அலுவலகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆவணங்கள் எளிமைப்படுத்தப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டில் மட்டும் கோவை அலுவலகம் மூலமாக 90 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இடைத்தரகர்களுக்கு என சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கூறினார். ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் மைக்ரோ சிப்கள் பொறுத்தப்பட்ட கடவுச்சீட்டுக்களை வழங்கும் பணி பரிச்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் 6 முதல் 8 மாத காலத்திற்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கோவை மண்டலத்திற்குட்பட்ட 6 மாவட்டங்களில் ராசிபுரம், குன்னூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் தபால் நிலைய கடவுச்சீட்டு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தலைமை தபால் நிலையங்களில் 300 சதுர அடி என்ற அளவிலான இடம் கிடைக்காததால் திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தாமதமாகி வருவதாகவும் கூறிய அவர் விரைவில் இடம் கிடைத்து மையம் திறக்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.