கோவை அருகே தேஜஸ் போர் விமான பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது

கோவை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து வெடித்து சிதறியது. பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது எப்படி என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வருந்துகின்றனர். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானிகள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை தேஜஸ் போர் விமானத்தில் விமானி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

 

அத்தப்பகவுண்டனூர் சாலையில் உள்ள நடராஜர் தோட்டம் பகுதி மீது விமானம் பறந்து கொண்டிருந்த போது அதிலிருந்து 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து வெடித்து விவசாய நிலத்தில் சிதறியது. நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான விவாசய நிலத்தில் விமான எரிபொருள் டேங்க் விழுந்து அந்த இடத்தில் சுமார் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. ஏடின‌எஃப் எனப்படும் விமான எரிபொருள் விவசாய நிலத்தில் கொட்டியதால் அந்த நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வெண்டை, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன.

அந்த விவசாய நிலத்தில் 20 அடி ஆழத்திற்கு மண்ணை மாற்றினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று கூறும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வந்த சூலூர் விமானப்படை தளத்தின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் 10 க்கும்மேற்பட்ட அதிகாரிகள் விமான எரிபொருளின் டேங்கின் சிதறிய பாகங்களை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த அதிகாரிகள் விமானம் பத்திரமாக தரை இறக்கபட்டதாக தெரிவித்தனர். மேலும் பாதிப்பு குறித்து வட்டாட்சியர் மூலம் அறிக்கை பெற்று உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.


Leave a Reply