மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது

Publish by: --- Photo :


மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வர்ஷினி ப்ரியா கொலை தொடர்பாக ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் கோவை விருந்தினர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த வழக்கில் தாமாக முன்வந்து ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

 

மேலும் வர்ஷினி ப்ரியாவின் குடும்பத்தினர் அளித்துள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது எனவும் அதில் முதல் கட்டமாக எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய 8 லட்சத்து 25 ஆயிரத்தில் 4 லட்சத்து 12,500 தற்போது வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். வர்ஷினி ப்ரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அவர் பசுமை வீடு கட்ட விரைவில் ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காவல்துறை விரைவான விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாக கூறிய அவர் தேவைப்பட்டால் தனி அரசு வழக்கறிஞரை நியமித்து வழக்கை விரைந்து நடத்தவும் அரசு தயாராக உள்ளதாக கூறினார். மதுரை அருகே சிவகங்கையில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே விரிவாக ஆய்வறிக்கை அளிக்கப்பட்டுள்ளது எனவும் இரு சமூகத்தினரிடையே சமூக நல கூட்டங்கள் நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

ஆணவப்படுகொலை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டங்களை அமல்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளது, எனவும் இருப்பினும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அது தொடர்பாக பரிந்துரை செய்யப்படும் எனவும் இது போன்ற அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உத்திரபிரேதசத்தை காட்டிலும் கேரளாவில் அதிகளவிலான எஸ்.எடி பிரிவினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது எனக்கூறிய அவர் இதுவரை 8 வழக்குகளை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியருடன் நேரில் சென்று சந்தித்த அவர் நிவாரண உதவித்தொகையை வழங்கினார். முதலில் இதனை பெற மறுத்த குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் காசோலையை பெற்றுக்கொண்டனர்.


Leave a Reply