நிதானமான ஆட்டம் தெளிவான ஷார்ட் செலக்சன் என பாக்கிஸ்தானின் பேட்டிங்கிற்கு புதிய அத்தியாயமாக உருவெடுத்துள்ளார் பாபர் அசாம். பாகிஸ்தானின் கோலி என்று அந்த நாட்டு ரசிகர்களால் அழைக்கபடும் பாபர் நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு ஒரு பேட்டிங் தூணாகவே வலம் வருகிறார். தொடரில் ஒரு சதம் , இரண்டு அரை சதங்களை விலாசியிருக்கும் பாபர் அசாம் சராசரியாக 61 66 ரன்களை வைத்துள்ளார்.
வேகப்பந்து, சூழல் பந்து என இரண்டையும் திறம்பட எதிர்கொள்ளும் பாபர் போட்டியின் முதல் பந்திலிருந்து கடைசி பந்து வரை விளையாட வேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளாட் கூறுவதை நியுசிலாந்து உடனான போட்டிகளில் அப்படியே பிரதிபலித்திருந்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமான பாபர் விளையாடிய 70 ஒரு நாள் போட்டிகளிலே பல்வேறு சாதனைகளை தன் வசம் ஆக்க தொடங்கி விட்டார்.
இது வரை ஒரு நாள் போட்டிகளில் 10 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் பாபர் விலாசியுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலியை முன் உதாரணமாக கூறும் பாபர் அசாம் அவரை போலவே கில்லாடி. கடைசியாக நியுசிலாந்து உடனான போட்டியில் தனது முன் மாதிரியான கோலியின் சாதனையையும் முறியடுத்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்.
அது மட்டுமின்றி கோலியை விட அதிவேகமாக 1000 மற்றும் 2000 ரன்களையும் கடந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அதிக ரன்களை எடுத்த பாகிஸ்தான் வீரர் , சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர். 2017 ஆம் ஆண்டிற்கான பாகிஸ்தானின் தலை சிறந்த வீரர் என பாபர் அசாமின் சாதனைகள் நீள்கிறது.டெஸ்ட், ஒரு நாள் , டி 20 என 3 வித கிரிக்கெட்டுகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் பாபர் பாகிஸ்தானின் தலை சிறந்த பேட்ஸ்மெண்களில் பட்டியலில் தவிர்க்க முடியாதவராக வலம் வருவார் என கிரிக்கெட் வல்லூனார்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.